செய்திகள்

பிரதமர் மோடிக்கு பூமியின் சாம்பியன் விருது - ஐ.நா. பொதுச் செயலாளர் நாளை வழங்குகிறார்

Published On 2018-10-02 14:19 GMT   |   Update On 2018-10-02 14:19 GMT
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு ’பூமியின் சாம்பியன்’ விருதினை நாளை டெல்லியில் நடைபெறும் விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் நாளை வழங்கி கவுரவிக்கிறார். #PMModi #ChampionsoftheEarth
புதுடெல்லி:

சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக பாடுபடுவர்களை ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்‘ என்ற உயரிய விருதை வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த ஆண்டு (2018) உலகின் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளிட்ட 6 பேரை ஐ.நா.சபை தேர்வு செய்து உள்ளது.

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு தலைமை ஏற்று வழிநடத்துவதற்காகவும், மேலும் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிப்பது என்று உறுதி ஏற்று செயல்பட்டு வருவதற்காகவும் இந்த விருதுக்கு பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் நாளை நடைபெறும் விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் அவருக்கு ‘சாம்பியன் ஆப் தி எர்த்‘ விருதினை வழங்கி கவுரவிக்கிறார்.



இதற்கிடையில், டெல்லியில் உள்ள விக்யான் பவனில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதல் கூட்டத்தை இன்று மாலை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றி வருகிறார். ஐ.நா. பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். #PMModi #ChampionsoftheEarth  
Tags:    

Similar News