செய்திகள்

மோடிக்கு ஆதரவாக பவார் பேசியதால் அதிருப்தி - தேசியவாத காங்கிரசில் இருந்து தாரிக் அன்வர் விலகல்

Published On 2018-09-28 10:02 GMT   |   Update On 2018-09-28 10:02 GMT
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் தாரிக் அன்வர் இன்று கட்சியில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார். #TariqAnwar #NCP #RafaleDeal
புதுடெல்லி:

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தாரிக் அன்வர். கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான இவர், அக்கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார். கடந்த சில தினங்களாக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து இவருக்கும், கட்சி தலைவர் சரத் பவாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.



அதாவது,  ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடிக்கு ஆதரவாக சரத் பவார் பேட்டி அளித்தார். ரபேல் ஒப்பந்தத்தில் மோடியின் நோக்கங்கள் தவறானவை அல்ல என்று கூறியிருந்தார். இதனால் பவார் மீது கடும் அதிருப்தி அடைந்த தாரிக் அன்வர் இன்று தேசியவாத கட்சியில் இருந்து விலகி உள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடி மீது எந்த தவறும் இல்லை என மராத்தி சேனலுக்கு சரத் பவார் அளித்த பேட்டி என்னை மிகவும் காயப்படுத்தியது. இதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறேன்.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். எனது எதிர்கால அரசியல் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. என் ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்து அறிவிப்பேன்’ என்றார். #TariqAnwar #NCP #RafaleDeal
Tags:    

Similar News