செய்திகள்

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை ஒப்புதல்

Published On 2018-09-27 16:15 GMT   |   Update On 2018-09-27 16:15 GMT
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. #ISRO #ScientistNambiNarayan #KeralaCabinet
புதுடெல்லி:

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் விஞ்ஞானிகள் பட்டியலில் தவிர்க்க முடியாத ஒருவராக கருதப்படுபவர்களில் நம்பி நாராயணனும் ஒருவர். திரவ எரிபொருளை வைத்து ராக்கெட் ஏவுவதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சி செய்து வந்தவர்.

இவர், கடந்த 1994-ம் ஆண்டு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தை விற்பனை செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என சிபிஐ தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து நம்பி நாராயணன் விடுதலை செய்யப்பட்டார்.

அதன்பிறகு, தன் மீது பொய்வழக்கு போட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நம்பி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விஞ்ஞானி நம்பி நாராயணனை கைது செய்தது தேவையில்லாதது எனக்கூறி, அவருக்கு கேரள அரசு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றும் பொருட்டு, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. #ISRO #ScientistNambiNarayan #KeralaCabinet
Tags:    

Similar News