செய்திகள்

வேலைக்கு போகவில்லை என திட்டிய தந்தை - ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற மகன்

Published On 2018-09-24 11:13 GMT   |   Update On 2018-09-24 13:48 GMT
குஜராத் மாநிலத்தில் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருப்பதாக தினமும் திட்டிவந்த தந்தையை, மகன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gujarat
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தின் சிமாலியா கிராமத்தில் வசிப்பவர் ராம்சிங் தட்வி. இவரது மகன் ராஜேந்திர தட்வி வேலைக்கு செல்லாமல் இருப்பதை கண்டித்துள்ளார்.

ராஜேந்திர தட்வி தனது அடிப்படை தேவைக்கு கூட சம்பாதிக்காமல் இருந்ததை ஏற்றுக்கொள்ளாத தந்தை தினமும் அவரை திட்டிவந்ததாகவும், வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், நேற்று மாலையும் ராம்சிங் தனது மகனை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திர தட்வி அருகில் இருந்த மரப்பலகையால் தந்தையை மிக மோசமாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ராம்சிங் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து, சம்பவம் குறித்து குற்றவாளியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜேந்திர தட்வி கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெற்ற தந்தையை மரப்பலகையால் கொடூரமாக தாக்கி மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gujarat
Tags:    

Similar News