செய்திகள்

கேரளாவில் பிஷ்ப் மீது பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரிக்கு பெருகும் ஆதரவு

Published On 2018-09-14 09:33 GMT   |   Update On 2018-09-14 09:33 GMT
கேரளாவில் பிஷப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த கன்னியாஸ்திரிக்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். #KeralaNun

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த குருவிலாங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை ஜலந்தர் பிஷப் பிராங்கோ முல்லக்கல் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது.

புகாரில் கன்னியாஸ்திரி கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பிஷ்ப் பிராங்கோ முல்லக்கல் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி இருந்தார். இது குறித்து கோட்டயம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் அவர்கள் ஜலந்தர் சென்றும் விசாரணை நடத்தினர். இதையடுத்து வருகிற 19-ந்தேதி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.

இதற்கிடையே புகாருக்கு ஆளான பிஷப் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யக் கோரி கன்னியாஸ்திரியின் ஆதரவாளர்கள் கொச்சியில் உண்ணாவிரதப் போராட் டம் தொடங்கினர்.

இதில் 5 கன்னியாஸ்திரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அவர்கள் பிஷப் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி வருகிறார்கள். இன்று 7-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

கன்னியாஸ்திரிகளின் போராட்டத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகளும், பெண்கள் உரிமைக்கான சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. நடிகை ரீமா கல்லிங்கல் போராட்ட களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

இதுபோல எழுத்தாளர் சாராஜோசப், மனித உரிமை ஆர்வலர் அஜிதா, நடிகை பாக்கியலெட்சுமி ஆகியோர் நேற்று போராட்ட மேடைக்கு சென்று ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அரசியல் கட்சி பிரமுகர்களும், மகளிரணி நிர்வாகிகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பிஷப் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யக்கோரி 3 பேர் கேரள ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், பிஷப் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்ய உத்தரவிட வேண்டும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேரள போலீசாரின் விசாரணையில் திருப்தி அடைவதாக தெரிவித்தனர். கன்னியாஸ்திரி புகாரில்கூறி உள்ள சம்பவங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

எனவே அதனை தெளிவாக விசாரிக்க தாமதம் ஆகும். அதுவரை பொறுத்திருக்கதான் வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

Similar News