செய்திகள்

கேரள மாநில வெள்ளப்பெருக்குக்கு முல்லைப்பெரியாறு காரணம் இல்லை - மத்திய நீர் ஆணையம் அறிக்கை

Published On 2018-09-11 04:46 GMT   |   Update On 2018-09-11 04:46 GMT
‘கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காரணம் இல்லை’, என மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு, மத்திய நீர் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது. #KeralaFloods #Mullaperiyardam
புதுடெல்லி:

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் கனமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த மாநிலம் முழுவதும் பலத்த சேதம் அடைந்தது.

இதற்கு தமிழக அரசே காரணம் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீரை திறந்து விட்டதால், அந்த தண்ணீர் இடுக்கி அணைக்கு வந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என அவர் தன்னுடைய குற்றச்சாட்டில் தெரிவித்து இருந்தார்.

மேலும், முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தை குறைக்கக்கோரி கேரளா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கிலும், வெள்ளப்பெருக்குக்கு தமிழக அரசுதான் காரணம் என்று அந்த மாநில தலைமை செயலாளர் பிரமாண பத்திரத்தில் சுட்டிக்காட்டினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்து இருந்தார். ‘கேரள மாநில வெள்ளப்பெருக்குக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது காரணம் இல்லை. முல்லைப்பெரியாறில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்கப்படவில்லை. அணையின் நீர்மட்டம் 139 அடிக்கு வந்தபோது 3 முறை எச்சரிக்கை விட்ட பின்னர் படிப்படியாகத்தான் தண்ணீர் திறக்கப்பட்டது. கனமழை காரணமாக ஏற்கனவே அங்கு அணைகள் அனைத்தும் நிரம்பி, உபரிநீர் வெளியேறிய காரணத்தால்தான் கேரளாவில் வெள்ள சேதம் ஏற்பட்டது’ என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த கருத்தை மத்திய நீர் ஆணையமும் வலியுறுத்தி உள்ளது. கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்திய மத்திய நீர் ஆணையம் அது தொடர்பான அறிக்கையை மத்திய நீர்வள அமைச்சகத்தில் சமர்ப்பித்தது.

48 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் வருமாறு:-

கேரளாவில் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை அதிகப்படியான மழை பெய்துள்ளது. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் 287 மி.மீ. மழைதான் அதிகபட்ச மழையாக பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த மாதம் 758 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட சுமார் 500 மி.மீ. அதிகம் ஆகும். அதிகப்படியான மழை காரணமாகவே அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளப்பெருக்குக்கு முல்லைப்பெரியாறு அணையை திறந்து விட்டது காரணம் இல்லை. முல்லைப்பெரியாறு மட்டுமல்ல, எந்த அணையில் இருந்தும் அதிகளவு நீர் திறந்து விடப்படவில்லை. சரியான அளவுதான் திறந்து விடப்பட்டு உள்ளது. எனவே, வெள்ளப்பெருக்குக்கு எந்த அணையும் காரணம் கிடையாது. மேலும், அணைகள் சரியான நேரத்துக்கு திறக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் தவறானது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  #KeralaFloods #Mullaperiyardam
Tags:    

Similar News