செய்திகள்

குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் எந்த குழப்பமும் இல்லை: தேவேகவுடா

Published On 2018-09-01 02:17 GMT   |   Update On 2018-09-01 02:17 GMT
குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் எந்த குழப்பமும் இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியுள்ளார். #DeveGowda
பெங்களூரு :

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள இல்லத்தில் இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. அது தொடர்பாக இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் என்னை சந்தித்து விவாதித்தனர். அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் என்னிடம் இருந்து சில தகவல்களை பெற்று சென்றனர். சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் இன்று (அதாவது நேற்று) நடக்கும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனைத்து விஷயங்களும் விவாதிக்கப்படும்.

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தற்போதைய சூழ்நிலையில் பா.ஜனதாவுடன் செல்ல தயாராக இல்லை. அதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் எந்த குழப்பமும் இல்லை. தரம்சிங் முதல்-மந்திரி ஆகும்போதே, அந்த பதவிக்கு மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டேவின் பெயரும் அடிபட்டது.

அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. அதனால் முதல்-மந்திரி பதவிக்கு தற்போது ஆர்.வி.தேஷ்பாண்டே பெயர் அடிபடுகிறது. இதில் என்ன தவறு உள்ளது?. ராமகிருஷ்ண ஹெக்டே மந்திரிசபையில் நானும், ஆர்.வி.தேஷ்பாண்டேவும் ஒன்றாக பணியாற்றினோம்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.  #DeveGowda #kumaraswamy
Tags:    

Similar News