செய்திகள்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பலனடைந்தது பணக்காரர்களே - ராகுல் காந்தி கடும் தாக்கு

Published On 2018-08-30 12:36 GMT   |   Update On 2018-08-30 12:36 GMT
பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணக்காரர்கள் மட்டுமே அதிக பலனடைந்துள்ளதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். #RahulGandhi #Demonetisation #BJP #PMModi
புதுடெல்லி:

2016-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

ஆனால், இதன்மூலம் இந்தியாவில் கருப்பு பணம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்ற பிரதமரின் வாக்குறுதியை ஏற்று அனைவரும் இந்த பணமதிப்பிழப்பினை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கணக்கிடும் பணியை மத்திய ரிசர்வ் வங்கி செய்து வருகிறது. சமீபத்தில் சுமார் 93% மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் திரும்ப வந்துவிட்டதாக தகவல் வெளியானது.

அனைத்து பணங்களும் வங்கி மூலம் மீண்டும் வந்துவிட்டதால், கருப்பு பணம் எங்கே? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது, பணமதிப்பு நீக்கம் என்பது பிழை அல்ல, அது இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என்றும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்தது குறித்து மக்களுக்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், மத்திய பா.ஜ.க அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பலனடைந்தது பணக்காரர்களே எனவும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்பு பணத்தை நல்ல பணமாக மாற்ற உதவியுள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #RahulGandhi #Demonetisation #BJP #PMModi
Tags:    

Similar News