செய்திகள்

எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினரில் வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலனை மறுக்க முடியாது - மத்திய அரசு

Published On 2018-08-16 22:32 GMT   |   Update On 2018-08-16 22:32 GMT
எஸ்.சி., எஸ்.டி., வகுப்பை சேர்ந்தவர்களில் வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்களை மறுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியது. #SCST #Benefit #SupremeCourt
புதுடெல்லி:

அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் பலனை வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு 12 ஆண்டுகளுக்கு முன்பு எம். நாகராஜ் வழக்கில் ஒரு தீர்ப்பை வழங்கியது.

2006-ம் ஆண்டு வழங்கிய இந்த தீர்ப்பில், எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினரில் வசதி படைத்தவர்களுக்கு அரசு பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் பலனை வழங்க தேவை இல்லை என்று கூறப்பட்டு உள்ளது.



இந்த தீர்ப்பை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் பரிசீலிக்க வேண்டுமா என்பது தொடர்பான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பாக நடந்து வருகிறது.

2006-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 11-ந்தேதி மறுத்து விட்டது.

இந்த நிலையில் அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப். நாரிமன், சஞ்சய் கிஷன் கவுல், இந்து மல்கோத்ரா ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆஜரானார். அவர், “இட ஒதுக்கீட்டின் பலனை எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினரில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் பெறுவதை உறுதி செய்யும் வகையில், அந்த இனத்தினரில் வசதி படைத்தவர்களை விலக்கி வைக்கலாமா?” என்ற கேள்விக்கு பதில் அளித்து வாதாடினார்.

‘இட ஒதுக்கீடை மறுக்க முடியாது’

அப்போது அவர் கூறியதாவது:-

எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினரில் வசதி படைத்தவர்கள் என்பதால் இட ஒதுக்கீட்டின் பலனை மறுக்க முடியாது.

அப்படி அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்களை மறுத்து, எந்த தீர்ப்பும் வழங்கப்பட்டது இல்லை.

அந்த வகுப்பினரில் குறிப்பிட்ட சிலர் வசதி படைத்தவர்களாக இருக்கலாம். ஆனால் சாதி மற்றும் பின்தங்கிய நிலை இன்னும் அவர்களுடன் சேர்ந்தே இருக்கிறது.

இட ஒதுக்கீட்டின் பலனை பெறுவதில் இருந்து எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினரில் குறிப்பிட்ட பிரிவினரை விலக்கி வைக்கலாமா என்ற கேள்விக்கான பதிலை ஜனாதிபதியும், நாடாளுமன்றமும்தான் முடிவு செய்ய முடியும். இதில் நீதித்துறையினருக்கு வேலை இல்லை.

எஸ்.சி., எஸ்.டி., வகுப்பை சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த சாதியில்தான் திருமணம் செய்ய வேண்டியது இருக்கிறது. அந்த வகுப்பினரில் நல்ல நிலையில் இருப்பவர்கள்கூட உயர் சாதியில் திருமணம் செய்ய முடியாது. இதில் உண்மை நிலை என்னவென்றால், ஒரு சிலர் வசதியான நிலைக்கு வந்து விட்டாலும்கூட, அவர்களது சாதியும், பின்தங்கிய நிலையும் அவர்களிடம் இருந்து நீங்கி விடுவது இல்லை. பாகுபாடு பார்க்கும் சாதி அமைப்பு நமது தேசத்தின் துரதிர்ஷ்டம்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.  #SCST #Benefit #SupremeCourt
Tags:    

Similar News