செய்திகள்

உ.பி.யில் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

Published On 2018-07-29 10:05 GMT   |   Update On 2018-07-29 10:05 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அறுபதாயிரம் கோடி ரூபாய் அளவில் புதிய முதலீட்டு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு புகழாரம் சூட்டினார். #Modi #UP #YogiAdityanath
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்காக இன்று பல்வேறு தொழில்நிறுவனங்களின் புதிய முதலீட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்திரா காந்தி பிரட்டிஸ்தான் பகுதியில் நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உ.பி முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், உ.பி கவர்னர் ராம் நாயிக், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பல மத்திய மாநில மந்திரிகள் பங்கேற்றனர்.

சுமார் 60 ஆயிரத்து 228 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார். இந்த திட்டங்களில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 10 ஆயிரம் கோடியும், பி.எஸ்.என்.எல் நிறுவனம் 5 ஆயிரம் கோடி ரூபாயும் தங்களது முதலீடுகளாக அளித்துள்ளனர்.

மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், டாடா நிறுவனம் மற்றும் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் தலா 5 ஆயிரம் மற்றும் 2 ஆயிரத்து 300 கோடி ரூபாயும் தங்களது முதலீடுகளாக அளிக்க உள்ளனர். மேலும், இதுபோன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைப்பதற்கான முதலீடுகளை அளிக்க உள்ளனர்.



இந்த திட்டங்கள் செயல்முறைக்கு வரும்போது சுமார் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் இந்த அடிக்கல் நாட்டு விழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இது ஒரு வரலாற்று சாதனையான நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார். மேலும், முந்தைய உத்தரப்பிரதேச அரசு மாநிலத்தின் வளர்ச்சியின் மீது தெளிவான நோக்கம் இல்லாமல் ஆட்சி செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். தற்போது நாடு சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும், 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களே காரணம் என மோடி சாடியுள்ளார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் முழு வளர்ச்சியையும் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் சிறப்பாக செய்துமுடிப்பார் என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், செல்போன் தயாரிப்பதில் இந்தியா 2-வது இடத்தில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி 2019 மார்ச் மாதத்துக்குள் மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி அளிக்கப்படும் எனவும் மோடி உறுதியளித்துள்ளார். #Modi #UP #YogiAdityanath
Tags:    

Similar News