செய்திகள்

ஒரே வேட்பாளர் 2 தொகுதியில் போட்டியிட தடை விதிக்க மத்திய அரசு எதிர்ப்பு

Published On 2018-07-17 10:29 GMT   |   Update On 2018-07-17 10:29 GMT
ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க கோரும் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி:

பா.ஜனதா மூத்த தலைவர் அஸ்வினிகுமார் சுப்ரீம்கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.

அதில், “ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதால் கூடுதல் செலவாகிறது. எனவே இரு தொகுதிகளில் போட்டியிடுவதை அனுமதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 33(7) பிரிவை செல்லாததாக அறிவிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீது பதிலளிக்கும்படி மத்திய சட்ட அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய சட்ட அமைச்சகம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

அதில், ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை கோரும் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேர்தல் சீர்திருத்தங்களை பொறுத்தவரை பாராளுமன்ற நடைமுறைகளின் படியே மேற்கொள்ள முடியும். ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மாற்றம் செய்யும் போது அது சார்ந்த மேலும் பல சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டி வரும்.

2 தொகுதியில் போட்டியிடும் நடைமுறையில் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறப்படுவதாக பொதுவான குற்றச்சாட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது. அதற்குரிய உறுதியான காரணங்கள் முன் வைக்கப்படவில்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News