செய்திகள்

குமாரசாமி மீது அதிருப்தி - சித்தராமையாவுக்கு மந்திரிக்கு இணையான பதவி வழங்க முடிவு

Published On 2018-06-25 06:17 GMT   |   Update On 2018-06-25 06:17 GMT
பட்ஜெட் தாக்கல் தொடர்பான கோரிக்கைகளை நிராகரித்ததால் அதிருப்தில் உள்ள சித்தராமையாவை சமாதானப்படுத்துவதற்காக மந்திரி பதவிக்கு இணையான பதவி வழங்க முடிவு செய்துள்ளனர். #Siddaramaiah
பெங்களூர்:

கர்நாடகத்தில் தனித்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ், சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. இதனால் குமாரசாமியின் ஜே.டி.எஸ். கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. என்றாலும் ஆட்சியின் தலைமை பொறுப்பு ஜே.டி.எஸ். கட்சியிடம் உள்ளது.

முதல்-மந்திரி பதவி இழந்த சித்தராமையா தற்போது கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக உள்ளார். காங்கிரஸ் மாநில தலைவர் ஜி.பரமேஸ்வரா துணை முதல்-மந்திரி பதவி வகிக்கிறார். ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்ற அதிகாரம் இல்லாத பதவியில் இருப்பதால் சித்தராமையா அதிருப்தியில் உள்ளார்.

இந்த நிலையில் சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது என்று சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஜே.டி.எஸ். கட்சி மேலிடம் நிராகரித்து விட்டது. இதனால் சித்தராமையா மேலும் அதிருப்தியில் உள்ளார்.

இதற்கிடையே சித்தராமையாவுக்கு மந்திரி பதவிக்கு இணையான அந்தஸ்து வழங்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறினார். ஆனால் அவருக்கு மந்திரி பதவி அந்தஸ்து வழங்க மாநில அரசு தயக்கம் காட்டி வருவதாக குற்றம் சாட்டினார்.

கூட்டணி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சித்தராமையாவுக்கு விதான்சவுதா தலைமைச் செயலகத்தில் அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது சோனியாகாந்தி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். அவருக்கு மந்திரி அந்தஸ்து வழங்கப்பட்டது. எனவே சித்தராமையாவுக்கு மந்திரி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பரமேஸ்வரா கூறினார்.

பட்ஜெட் தாக்கல் செய்யும் விவகாரத்தில் சித்தராமையாவின் கோரிக்கையை காங்கிரஸ் மேலிடம் நிராகரித்து விட்டது. மேலும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வராவும் பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக குமாரசாமிக்கு ஆதரவாக செயல்படுவதாக சித்தராமையா கருதுகிறார்.

இதனால் கூட்டணியில் சித்தராமையாவால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க அவருக்கு மந்திரி அந்தஸ்து வழங்கலாம் என்ற முடிவுக்கு குமாரசாமி வந்து இருக்கிறார். இன்னும் ஒருசில நாட்களில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

தற்போது விதான் சவுதா அலுவலகத்துக்கு சித்தராமையா வருவது கிடையாது. மந்திரி அந்தஸ்து அறிவிப்பு வெளியானதும் அவர் அலுவலகம் செல்வார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். #Siddaramaiah
Tags:    

Similar News