செய்திகள்

லித்தியம் - அயன் பேட்டரி தொழில்நுட்பத்தை தனியாருக்கு வழங்க இஸ்ரோ முடிவு

Published On 2018-06-12 23:35 GMT   |   Update On 2018-06-12 23:35 GMT
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத லித்தியம்-அயன் பேட்டரி தயாரிப்பு தொழில்நுட்பத்தை தனியார் தொழிற்சாலைகளுக்கு வழங்க இஸ்ரோ நிறுவனம் முடிவெடுத்துள்ளது. #ISRO #Liiontechtransfer

பெங்களூரு: 

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத லித்தியம்-அயன் பேட்டரி தயாரிப்பு தொழில்நுட்பத்தை தனியார் தொழிற்சாலைகளுக்கு வழங்க இஸ்ரோ நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை இன்னும் அதிகம் உயர்ந்துவிடும். ஒரு கட்டத்தில் அவை கிடைக்காமலும் போகலாம். அது போன்ற சூழ்நிலையில் பேட்டரிகளின் தேவை அத்தியாவசியமாகிவிடும். ராக்கெட்டுகளில் தற்போது லித்தியம்-அயன் பேட்டரிகள் பயன்படுகின்றன. அதை நாங்களே தயாரிக்கிறோம். இந்த புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும்  பேட்டரிகளின் எடை குறைவாக இருக்கும் என்பதுடன், அதில் அதிக சக்தியை சேமிக்க முடியும். அதன்மூலம் நீண்ட காலத்திற்கு மின்சாரத்தை சேமித்து பயன்படுத்த முடியும்.

நாம் பயன்படுத்தும் செல்போன்களில் இருப்பது அத்தகைய பேட்டரிதான். இந்திய நிறுவனங்களுக்கு தொழில்நுட்பத்தை வழங்கினால் அதன் பயன் நம் அனைவருக்கும் கிடைக்கும். குறிப்பாக மின்சார தடை ஏற்பட்டால் விளக்குகளை ஒளிர செய்வதற்காக யூபிஎஸ் பேட்டரிகளை பயன்படுத்துகிறோம். வீடு அல்லது அலுவலகத்தின் தேவையை கருத்தில் கொண்டு யூபிஎஸ் பேட்டரிகளின் அளவு மாறுபடும். அத்துடன் அதை வைப்பதற்கும் பெரிய இடம் தேவை. லித்தியம்-அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டால், சிறிய இடமே  போதுமானது. அத்துடன் சாதாரண யூபிஎஸ் பேட்டரியுடன் ஒப்பிடும்போது அதிக மின்சாரத்தை சேமிக்கமுடியும். மின்சார இழப்பு ஏற்படாது. சுற்றுச்சூழலுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #ISRO #Liiontechtransfer
Tags:    

Similar News