செய்திகள்

நிபா வைரஸ் பீதி எதிரொலி - கேரளாவில் இருந்து பழங்கள் இறக்குமதிக்கு சவுதி அரேபியா தடை

Published On 2018-06-06 07:02 GMT   |   Update On 2018-06-06 07:02 GMT
நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கேரளாவில் இருந்து இறக்குமதியாகும் பழங்களுக்கு சவுதி அரேபியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. #NipahVirus
திருவனந்தபுரம்:

கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 18 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் இந்த காய்ச்சல் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவில் பரவி உள்ள நிபா வைரஸ் காய்ச்சலுக்கு வவ்வால்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது.

எனவே வவ்வால் கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம் என்றும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டனர். மேலும் வவ்வாலின் ரத்தம், எச்சம் மாதிரிகள் ஆய்வுக்காக புனேவில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வில் வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் பிராய்லர் கோழிகள் மூலம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதாகவும், எனவே கோழி இறைச்சியை யாரும் சாப்பிட வேண்டாம் என்றும் கேரளாவில் சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவியது. ஆனால் இது வெறும் வதந்தி என்றும் இது போன்ற வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கேரள அரசு எச்சரித்தது.

இந்த நிலையில் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கேரளாவில் இருந்து இறக்குமதியாகும் பழங்களுக்கு சவுதி அரேபியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல ஐக்கிய அரபு அமீரகமும், கேரள பழங்களுக்கு தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக கேரளாவில் இருந்து அனுப்பப்பட்ட 100 டன் பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் திருப்பி அனுப்பி உள்ளன. #NipahVirus
Tags:    

Similar News