செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி - வட்டி விகிதத்தை உயர்த்துகிறது ரிசர்வ் வங்கி

Published On 2018-05-22 05:44 GMT   |   Update On 2018-05-22 05:44 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வானது பண வீக்கம் அதிகரிக்க வழிவகுக்கும் என்பதால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு உள்ளது. #RBI #petrol #diesel
புதுடெல்லி:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கர்நாடக தேர்தலையொட்டி சில நாட்கள் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்தபிறகு அடுத்த 2 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன.

அவ்வகையில் 9-வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வரலாறு காணாத அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் வரலாற்றிலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 32 காசுகள் உயர்ந்து ரூ 79.79 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து ரூ 71.87 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.



பெட்ரோல், டீசல் விலை இப்படி உயர்ந்துகொண்டே போனால், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி, மற்ற பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் நாட்டின் பணவீக்கமும் அதிகரிக்கலாம். எனவே, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் என்ற அளவிற்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை வெளியிடும்போது இந்த வட்டி உயர்வு குறித்த தகவல் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், ஜூன் மாதத்திற்கான நிதிக்கொள்கையில் எந்த மாற்றமும் செய்ய வாய்ப்பு இல்லை என வெளிநாட்டு தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  #RBI #petrol #diesel
Tags:    

Similar News