செய்திகள்

கர்நாடகாவில் இரண்டு துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர்களுடன் குமாரசாமி இன்று ஆலோசனை

Published On 2018-05-21 05:08 GMT   |   Update On 2018-05-21 05:08 GMT
கர்நாடக மாநிலத்தில் இரண்டு துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடன் குமாரசாமி ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.#KarnatakaElections #KarnatakaFloorTest #Kumaraswamy
பெங்களூரு:

கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி வருகிற 23-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார். 38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதையும் தாண்டி 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மந்திரி சபைக்கு உள்ளது.

தனக்கு ஆதரவு அளிக்கும் முடிவு எடுத்த சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு குமாரசாமி நன்றி தெரிவித்தார். இன்று மாலை அவர்களை நேரில் சந்திக்க உள்ளார். முன்னதாக இன்று காலை ஹசன் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் குமாரசாமி தரிசனம் செய்தார். பின்னர் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இரண்டு துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தெரிவித்திருக்கிறார். அநேகமாக பரமேஸ்வரா துணை முதல்வர் ஆகலாம் என கூறப்படுகிறது. டெல்லியில் மத்திய தலைவர்களை குமாரசாமி சந்தித்த பின்னர் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

எனவே, புதன்கிழமை குமாரசாமி மட்டுமே பதவியேற்பார். அன்றே நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெறும் என்று தெரிகிறது. மற்ற அமைச்சர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்தபிறகு பதவியேற்கலாம். #KarnatakaElections #KarnatakaFloorTest #Kumaraswamy
Tags:    

Similar News