செய்திகள்

ரஷிய அதிபர் புதினுடன் மோடி இன்று பேச்சுவார்த்தை- இருநாட்டு உறவை வலுப்படுத்தும் என்று நம்பிக்கை

Published On 2018-05-21 01:12 GMT   |   Update On 2018-05-21 01:12 GMT
ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தை, இருநாட்டு உறவை வலுப்படுத்தும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார்.#Modi #PMModi
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி, ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். ரஷியாவின் சோச்சி நகரில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை இன்று அவர் சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின்போது, இருதரப்பு பிரச்சினைகள், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால், இந்தியா மற்றும் ரஷியாவுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நிலவரம், பயங்கரவாத அச்சுறுத்தல், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு, பிரிக்ஸ் மாநாடு விவகாரங்கள் ஆகியவை பற்றியும் அவர்கள் விவாதிக்கிறார்கள்.

மேலும், ரஷியா மீது அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடையால், இந்தியா-ரஷியா பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்தியா-ரஷியா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பை மூன்றாம் நாடுகளுக்கு விரிவுபடுத்துவது, கொரிய தீபகற்ப நிலவரம் ஆகியவை பற்றியும் பேசுகிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி நேற்று தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நட்புரீதியான ரஷிய மக்களுக்கு வணக்கம். ரஷியாவின் சோச்சி நகருக்கு செல்வதற்கும், ரஷிய அதிபர் புதினை சந்திப்பதற்கும் ஆவலாக இருக்கிறேன். அவரை சந்திப்பது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதுதான்.

புதினுடனான பேச்சுவார்த்தை, இந்தியா-ரஷியா இடையிலான விசேஷ, வியூகம் சார்ந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு மோடி கூறியுள்ளார். #Modi #PMModi
Tags:    

Similar News