செய்திகள்

வாரணாசியில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

Published On 2018-05-15 22:16 GMT   |   Update On 2018-05-15 22:16 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. #Varanasiflyovercollapse

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ராணுவ கண்டோன்மன்ட் பகுதியில் சாலை மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை இந்த பாலத்தின் ஒரு பகுதி பயங்கரமாக இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பாலத்தின் கீழ் பகுதியில் நின்றிருந்த பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டன. மேலும், அவ்வழியாக நடந்து சென்றவர்களும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினர்.

தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றி பலரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தில் 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகின.

இச்சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியானதும் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்-ஐ தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி, பலியானவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு 250 வீரர்களை கொண்ட தேசிய பேரிட மீட்பு படையினரை அனுப்பிவைக்கப்பட்டனர்.



இந்த துயர சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவுக்கு தலா 2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. #Varanasiflyovercollapse
Tags:    

Similar News