செய்திகள்

அகாலிதளம் ஆட்சியில் அமிர்தசரஸ் மாநகராட்சியில் ரூ.100 கோடி ஊழல் - சித்து குற்றச்சாட்டு

Published On 2018-05-03 05:22 GMT   |   Update On 2018-05-03 05:22 GMT
முந்தைய அகாலிதளம் - பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாநகராட்சியில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக உள்ளாட்சித்துறை மந்திரி சித்து குற்றம்சாட்டி உள்ளார். #NavjotSinghSidhu
அமிர்தசரஸ்:

முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து பஞ்சாபில் காங்கிரஸ் மந்திரி சபையில் உள்ளாட்சித் துறை மந்திரியாக இருக்கிறார்.  நேற்று அவர் அமிர்தசரஸ் நகருக்கு சென்று உள்ளாட்சித் துறை சம்பந்தப்பட்ட பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில் முந்தைய அகாலிதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் அமிர்தசரஸ் மாநகராட்சியில் ரூ.100 கோடி ஊழல் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை முந்தைய ஆட்சி காலத்தில் அமிர்தசரஸ் மாநகராட்சியில் வருங்கால வைப்பு நிதி, சொத்து வரி வசூல் மற்றும் மாநகராட்சி கடைகளை குத்தகைக்கு விடுவது ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளன.

இது தொடர்பான 70 கணக்குகளை ஆய்வு செய்ததில் 3 கணக்குகளில் முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது. இது தொடர்பாக முதன்மை ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரி சுதீப் மானக் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சுதந்திரமான முறையில் கணக்குகளை ஆய்வு செய்தனர்.

இதில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் கழிவுநீர் அகற்றல், சுகாதாரப் பணிகள் போன்றவற்றிலம் ஊழல் நடந்து இருக்கிறது.

சொத்து வரி வசூலைப் பொறுத்தவரை 9 ஆயிரம் பேரிடம் வசூல் செய்யப்பட்ட தொகை மாநகராட்சி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.

இதில் வங்கிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எந்த அரசு துறைக்கும் 3-க்கும் மேற்பட்ட வங்கி கணக்கு கிடையாது. ஆனால் அமிர்தசரஸ் மாநகராட்சிக்கு 71 வங்கி கணக்குகள் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #NavjotSinghSidhu #Congress
Tags:    

Similar News