செய்திகள்

தடையை மீறி பேரணி நடத்தச் சென்ற காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது

Published On 2018-04-28 10:52 GMT   |   Update On 2018-04-28 10:52 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று தடையை மீறி பேரணி நடத்தச் சென்ற காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்தனர். #YasinMalik #JKLFchief
ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம் தீவிரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டதை கண்டித்தும், மாணவர்கள் மீது அடக்குமுறையை பயன்படுத்திவரும் தேசிய புலனாய்வு அமைப்பினர், பலரை கைது செய்து வருவதை கண்டித்தும், ஸ்ரீநகர் நவ்ஹாட்டா பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் இருந்து இன்று பேரணி நடத்த ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி என்னும் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த பேரணிக்கு போலீசார் தடை விதித்திருந்தனர். ஆனால், தடையை மீறி பேரணி நடத்துவதற்காக யாசின் மாலிக் இன்று பிற்பகல் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

அந்த காரை கவுசியா மருத்துவமனை அருகே வழிமறித்த போலீசார், யாசின் மாலிக்கை கைது செய்து கோத்தி பாக் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அவரை கைது செய்யும் போது போலீசார், தகாத முறையில் இழிவாக பேசியதாகவும், தாக்கியதாகவும் தகவல் பரவியது. போலீசாரின் இந்த அத்துமீறலுக்கு மிதவாத ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவர் உமர் பாரூக் கண்டனம் தெரிவித்துள்ளார். #tamilnews #YasinMalik #JKLFchief
Tags:    

Similar News