செய்திகள்

அடுத்த பிரதமர் யார் என்பதை ஆந்திர மாநிலம் முடிவு செய்யும் - சந்திரபாபு நாயுடு

Published On 2018-04-22 04:58 GMT   |   Update On 2018-04-22 04:58 GMT
அடுத்த பிரதமர் யார் என்பதை ஆந்திர மாநிலம் முடிவு செய்யும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விஜயவாடா:

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அமராவதியில் நடந்த சதிகாரா மித்ரா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்ட போது, ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்குவதாகவும் மற்றும் பல்வேறு உறுதி மொழிகளையும் அளித்தார்கள்.

ஆனால், இதில் எதையும் நிறைவேற்றாமல் மத்திய அரசு ஆந்திராவுக்கு துரோகம் செய்து விட்டது. ஆந்திராவுக்கும் ஒரு காலம் வரும். இந்தியாவின் அடுத்த  பிரதமர் யார் என்பதை நாம் தான் முடிவு செய்வோம்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியில் இருப்பதால் நமது பிரச்சினைகளை பற்றி பேசினால் காது கொடுத்து கேட்பதில்லை.

கடந்த தேர்தலில் மட்டும் ஒன்றிரண்டு தொகுதிகளில் பா.ஜனதா தோல்வி அடைந்திருந்தாலும் கூட்டணி ஆட்சி ஏற்பட்டு இருக்கும். அப்படி நடந்து இருந்தால் நமது கோரிக்கையை கவனிப்பார்கள்.

நான் இப்போதே ஆந்திர மக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இப்போதே நீங்கள் முடிவு எடுத்து கொள்ளுங்கள்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளிலும் தெலுங்குதேசம் வெற்றி பெற நீங்கள் வாக்களிக்க வேண்டும். அப்படி நடந்தால் அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் நம்மிடம்தான் இருக்கும்.

ஆந்திராவில் உள்ள எதிர்க்கட்சிகள் பா.ஜனதாவுடன் ரகசிய கூட்டு வைத்து கொண்டு மாநிலத்துக்கு அநீதி அளித்து வருகின்றன.

மோடியுடன் சேர்ந்து கொண்டு இங்கு முழு அடைப்பு நடத்தினார்கள். இதன் மூலம் மாநில பொருளாதார வளர்ச்சியை பாதிக்க செய்து இருக்கிறார்கள்.

நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தொடர்ந்து போராடுவோம். சாதித்து காட்டுவோம்.

மோடியும் ஒரு காலத்தில் ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்தவர். இப்போது அவர் பிரதமர் ஆகி இருக்கிறார். அவர், நாட்டில் உள்ள 29 மாநிலங்களுக்கும் உரிய நீதியை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
Tags:    

Similar News