செய்திகள்

கட்சி அரசியலில் இனி ஈடுபடமாட்டேன் - பா.ஜ.க.வில் இருந்து வெளியேறிய யஷ்வந்த் சின்கா தகவல்

Published On 2018-04-21 10:04 GMT   |   Update On 2018-04-21 10:04 GMT
கட்சி அரசியலில் இனி ஈடுபட மாட்டேன் என பா.ஜ.க.வில் இருந்து வெளியேறிய யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். #YashwantSinha
பாட்னா:

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவர் யஷ்வந்த் சின்கா. வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததில் இருந்தே யஷ்வந்த் சின்காவுக்கும் கட்சி தலைமைக்கும் இடையிலான நெருக்கம் குறைய ஆரம்பித்தது.

பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதும் யஷ்வந்த் சின்ஹாவுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. யஷ்வந்த் சின்ஹாவுக்கு எந்த பொறுப்பும் கொடுக்காததால் அவர் பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்து வந்தார்.

குறிப்பாக பிரதமர் மோடியின் கொள்கை முடிவுகளை அவர் குறை கூறினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தையே சிதைத்து விட்டதாக குற்றம்சாட்டினார். இடையில், ரஷ்டிர மஞ்ச் என்ற ஒரு அமைப்பைத் தொடங்கினார்.

இந்த நிலையில் இன்று யஷ்வந்த் சின்ஹா பாரதிய ஜனதாவில் இருந்து விலகினார். பாட்னாவில் ராஷ்டிர மஞ்ச் நடத்திய நிகழ்ச்சியில் இதுதொடர்பாக அவர் பேசியதாவது:-

இன்று நான் பா.ஜ.க.வுடனான அனைத்து உறவுகளையும் முடித்துக்கொள்கிறேன். பா.ஜ.க.வின் நிலைமை சரியில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத் தொடரை ஏற்கெனவே பார்த்திருப்பீர்கள். வரலாற்றில் மிகக்குறைந்த நேரம் நடந்த கூட்டத் தொடர் இதுதான்.

இனி பா.ஜ.க.வுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க முயற்சி செய்வேன். எந்த அரசியல் கட்சியிலும் நான் சேர மாட்டேன். எந்த விதமான கட்சி அரசியலும் ஈடுபடமாட்டேன். உயர் பதவிக்கு வருவதில் எனக்கு விருப்பம் இல்லை. எந்த பதவியை பெறுவதிலும் ஆர்வம் இல்லை. ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக ஒரு புரட்சியை ஆரம்பிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். #YashwantSinha
Tags:    

Similar News