செய்திகள்

ஓடும் ரெயிலில் சில்மி‌ஷம் - சாமியார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி

Published On 2018-04-21 05:40 GMT   |   Update On 2018-04-21 05:40 GMT
கேரளாவில் ஓடும் ரெயிலில் சில்மி‌ஷம் செய்த சாமியார் மீது ‘பெப்பர் ஸ்பிரே’ அடித்த மாணவி அவரை போலீசிலும் பிடித்து கொடுத்தார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து குருவாயூருக்கு நேற்று மாலை பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டது.

ரெயில் கிளம்பியதும் பெண்கள் பெட்டியில் 70 வயது மதிக்கத்தக்க சாமியார் ஒருவர் ஏறினார். இதற்கு பெட்டியில் இருந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர் நான் ஒரு சாமியார் என்று கூறி பெண்களின் அருகே அமர்ந்துகொண்டார்.

பின்னர் அவர்களிடம் பேச்சு கொடுத்து சில்மி‌ஷத்திலும் ஈடுபட்டார். சாமியாரின் பேச்சும், நடவடிக்கையும் அத்துமீறுவதை அதே பெட்டியில் பயணம் செய்த என்ஜினீயரிங் மாணவி ஒருவர் பார்த்தார்.

அந்த மாணவி சாமியாரின் அருகில் சென்று அவரை எச்சரித்தார். பெண்கள் பெட்டியில் இருந்து இறங்கி விடும்படி கூறினார். இதில் ஆத்திரமடைந்த சாமியார், அந்த மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் மாணவியின் கைகளை பிடித்து இழுக்கவும் செய்தார்.

இதை கண்டு திடுக்கிட்ட மாணவி, மின்னல் வேகத்தில் தனது கைப்பையை திறந்து அதில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்து சாமியாரின் முகத்தில் ‘ஸ்பிரே’ அடித்தார். இதில் சாமியாரின் கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. அவர் கைகளால் முகத்தை மூடிய படி பெட்டியில் அமர்ந்து அழுதார்.

இதற்குள் ரெயில் அங்கமாலி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு இச்சம்பவம் பற்றி ரெயிலில் இருந்தவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சாமியாரை கைது செய்து அழைத்து சென்றனர். கைதான சாமியார் வயநாடு பகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது.

ஓடும் ரெயிலில் சில்மி‌ஷ சாமியாரை சமயோஜிதமாக செயல்பட்டு முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து போலீசில் பிடித்து கொடுத்த என்ஜினீயரிங் மாணவிக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

இதுபற்றி மாணவி கூறும் போது, கடந்த வாரம்தான் எங்கள் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது. அப்போதுதான் பெப்பர் ஸ்பிரே பற்றி கூறியதோடு, ஆளுக்கொரு பெப்பர் ஸ்பிரேயும் கொடுத்தனர். அதனை நான் கைப்பையில் வைத்திருந்தேன். அந்த பெப்பர் ஸ்பிரே சரியான நேரத்தில் எனக்கு உதவியது. எனவேதான் சாமியாரை மடக்கிப்பிடிக்க உதவியது, என்றார்.

Tags:    

Similar News