செய்திகள்

கடத்தல் முயற்சியில் இருந்து சமயோசிதமாக தப்பிய சிறுமி

Published On 2018-04-19 10:13 GMT   |   Update On 2018-04-19 10:13 GMT
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பால் வாங்கச் சென்ற சிறுமியை ஒரு நபர் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பஜாஜ் நகரைச் சேர்ந்த 9 வயது  சிறுமி இன்று காலை பால் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆசாமி, அந்த சிறுமியிடம் ஒரு பள்ளியின் முகவரி கேட்டுள்ளார். அத்துடன் ‘மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொள், செல்லும் வழியில் பால் கடையில் விட்டுவிடுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதனை நம்பி மோட்டார் சைக்கிளில் அந்த சிறுமி சென்றுள்ளார். ஆனால், மோட்டார் சைக்கிள் மற்றொரு தெரு வழியாக சென்றது. இதனைப் பார்த்து பதறிப்போன சிறுமி கூச்சலிட்டுள்ளார். உடனே அந்த ஆசாமி பைக்கை நிறுத்த, சிறுமி கீழே குதித்து தப்பிச் சென்றுள்ளார். அப்போது அந்த ஆசாமி,  சிறுமியை பிடித்து இழுக்க முயற்சித்துள்ளார். இதில் சிறுமியில் உடலில் லேசான கீறல் ஏற்பட்டுள்ளது.

வீட்டுக்கு வந்த சிறுமி, நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ராஜஸ்தானில் வீட்டின் அருகிலேயே சிறுமியை கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News