செய்திகள்

ரூபாயின் தேவை குறித்து ரிசர்வ் வங்கி சரியாக கணக்கிட தவறிவிட்டது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Published On 2018-04-19 07:11 GMT   |   Update On 2018-04-19 07:11 GMT
ரூபாயின் தேவை குறித்து ரிசர்வ் வங்கி சரியாக கணக்கிட தவறிவிட்டதே பணத்தட்டுபாட்டுக்கு காரணம் என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாடு குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

நாட்டின் தேவையான அளவுக்கு ரிசர்வ் வங்கி பணத்தை அச்சிட்டு வெளியிட ஏற்பாடு செய்ததா? என்பதை ரிசர்வ் வங்கி விளக்க வேண்டும்.

பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்டதற்கு பிறகு 2.75 சதவீதம் அளவுக்கு மட்டுமே கூடுதலாக பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இது, சரியானதுதானா?

அப்படியானால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் அளவுக்கு பணம் சப்ளை செய்ய ரிசர்வ் வங்கி அனு மதிக்கவில்லையா?

அறுவடைக்கு பிந்தைய காலங்களில் மக்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதையும், சாதாரண மக்கள் எவ்வளவு பணம் எடுப்பார்கள், பின்னர் எவ்வளவு பணத்தை திருப்பி செலுத்துவார்கள் என்பதை ரிசர்வ் வங்கி சரியாக கணக்கிட தவறி விட்டது. இதனால்தான் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட போது வெளிவந்த பூதம் இப்போது மீண்டும் திரும்பி வந்துள்ளது.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும், பாராளுமன்ற நிதி கமிட்டியின் உறுப்பினருமான தினேஷ் திரிவேதி கூறும் போது, 2 ஆயிரம் ரூபாய் நோட்டை அரசு ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது. இதுதான் பணத்தட்டுப்பாட்டுக்கு காரணமாகும் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன்கேரா கூறும்போது, இப்போது அறுவடை காலம், திருமண விழா காலம், அட்சய திருதியை என மக்கள் சந்தோ‌ஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் பணத்தட்டுப்பாடு அவர்களின் மகிழ்ச்சியை பறித்து விட்டது. இதற்கும் ஏதாவது புதிய காரணத்தை கூறி மன்னிப்பு கேட்பார்கள்.

இந்த அரசுக்கு சரியான திட்டமிடுதல் இல்லை. போதிய திறமை இல்லை என்பதையே பண தட்டுப்பாடு காட்டுகிறது என்று கூறினார். #RBI #demonitisation #PChidambaram
Tags:    

Similar News