செய்திகள்
பாராளுமன்றம் அருகே தமிழக விவசாயிகள் 2-வது நாளாக இன்று தலையில் முக்காடு அணிந்து உண்ணாவிரதம் இருந்த காட்சி.

தலையில் முக்காடு அணிந்து டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்

Published On 2018-03-27 11:14 GMT   |   Update On 2018-03-27 11:14 GMT
டெல்லியில் இரண்டாம் நாளான இன்று தமிழக விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.
புதுடெல்லி:

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை பின்பற்றி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வருகிற 29-ந்தேதிக்குள் முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி டெல்லி பாராளுமன்றம் அருகே தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர்.பாண்டியன் தலைமையில் 90 விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். முதல் நாளான நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

இரண்டாம் நாளான இன்று தமிழக விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது இனியும் காலம் தாழ்த்தாமலும், மவுனம் காக்காமலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

வரும் நாட்களில் இந்த போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இன்று பிற்பகலில் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள், விவசாயிகளின் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. #Tamilnews

Tags:    

Similar News