செய்திகள்

39 பேரும் கொல்லப்பட்டதாக 3 ஆண்டுகளாக கூறிவருகிறேன் - உயிர் தப்பியவர் பேட்டி

Published On 2018-03-20 10:37 GMT   |   Update On 2018-03-20 10:37 GMT
ஈராக்கில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் பாராளுமன்றத்தில் கூறிய நிலையில், அங்கிருந்து உயிர் தப்பியவர் அதிர்ச்சிகர தகவல் வெளியிட்டுள்ளார்.
சண்டிகர்:

ஈராக்கில் தீவிரவாதிகளால் கடந்த 2014-ம் ஆண்டு கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டு விட்டதாக மத்திய சுஷ்மா ஸ்வராஜ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில், 39 பேரும் கொல்லப்பட்டதாக கடந்த மூன்றாண்டுகளாக கூறி வருகிறேன், மத்திய அரசு பலியானவர்களின் குடும்பங்களை ஏமாற்றுகிறது என அங்கிருந்து உயிர்தப்பிய ஹர்ஜித் மாசிஹ் என்பவர் பேட்டியளித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த ஹர்ஜித் மாசிஹ் கூறுகையில், 2014-ம் ஆண்டு ஈராக்கில் நாங்கள் 40 இந்தியர்கள் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தோம். அப்போது, அங்கு துப்பாக்கிகளுடன் நுழைந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டனர்.

எனது கால் மூட்டில் குண்டடி பட்டு நான் கீழே விழுந்தேன். எனது கண் முன்னே அனைவரும் கொல்லப்பட்டனர். பின்னர், மயக்க நிலைக்கு சென்ற என்னை யாரோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை முடிந்ததும் வங்காளதேச தூதரகம் உதவியுடன் இந்தியா வந்தேன்.

39 பேரும் கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அவர்களின் குடும்பத்தினரிடம் கூறி வந்தது. ஆனால், அவர்கள் கொல்லப்பட்டதாக நான் மூன்றாண்டுகளாக கூறி வருகிறேன் என ஹர்ஜித் மாசிஹ் தெரிவித்துள்ளார்.

எனினும், ஹர்ஜித் மாசிஹ் கூறியுள்ளதை சுஷ்மா சுவராஜ் மறுத்துள்ளார். “மாசிஹ் எவ்வாறு அங்கிருந்து தப்பி வந்தார் என்பதை கூற மறுக்கிறார்” என சுஷ்மா தெரிவித்துள்ளார். 

இதேபோல, கொல்லப்பட்டதாக கூறப்படுவரின் சகோதரி ஒருவர் கூறுகையில், “எனது சகோதரர் கொல்லப்பட்டதாக பாராளுமன்றத்தில் கூறுகின்றனர். வெளியுறவு அமைச்சகம் எனது குடும்பத்தினரிடம் தெரிவித்தால் தான் அதனை நம்புவேன்” என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், “39 பேரும் எப்போது கொல்லப்பட்டனர் என்ற தகவலை அரசு வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

இந்த கேள்விகளை சுஷ்மாவிடம் எழுப்பப்பட்ட போது, “வெளிநாட்டில் நடந்த சம்பவங்களை பாராளுமன்றத்தில் தெரிவிப்பது தான் முறையான ஒன்று. ஈராக்கில் அவர்கள் உயிருடன் இருந்ததற்கோ, கொல்லப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் 2014 முதல் 2017 வரை கிடைக்கவில்லை” என தெரிவித்தார். 
Tags:    

Similar News