செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியால் காஷ்மீர் நிலவரம் சீரழிந்து வருகிறது - மன்மோகன் சிங்

Published On 2018-03-18 08:28 GMT   |   Update On 2018-03-18 08:28 GMT
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியால் பொருளாதாரம் நிலைகுலைந்ததுடன் காஷ்மீர் நிலவரம் சீரழிந்து வருவதாக மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். #ManmohanSingh #CongressPlenary
புதுடெல்லி:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொடியேற்றி தொடங்கி வைத்தார். சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்று வருகின்றனர்.

இன்றைய மாநாட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றியபோது, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியால் பொருளாதாரம் நிலைகுலைந்ததுடன் காஷ்மீர் நிலவரம் சீரழிந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.



மத்திய அரசால் திணிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை சரியான வகையில் சீராய்வு செய்யாத செயல்பாடு என்று குறிப்பிட்ட மன்மோகன் சிங், இதேபோல் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பும் அவசரகதியில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதன் மூலம் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை குளறுபடி நிலைக்கு கொண்டு சென்றதுடன், பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்றவை சிறுதொழில் நிறுவனங்களை அழித்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.



ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமாக இந்த அரசு கையாண்டுள்ளது.
அங்கு நாளுக்குநாள் நிலைமை சீரழிந்து வருகிறது. இன்னும் ஆறாண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இருமடங்காக பெருகும் என்னும் பிரதமர் மோடியின் கருத்து நிறைவேறாத ’வெற்று வார்த்தை’ ஆகும்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் வழிகாட்டலின்படி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏராளமான சாதனைகளை புரிந்துள்ளது. இனி நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்தி செல்ல காங்கிரஸ் கட்சி ஆற்ற வேண்டிய வரலாற்று சிறப்புமிக்க பணிகளுக்கு இப்போது நடைபெறும் இந்த மாநாடு ஊக்கசக்தியாக அமையும் என நம்புகிறேன் என்றும் அவர் கூறினார். #ManmohanSingh #CongressPlenarySession #CongressPlenary
Tags:    

Similar News