செய்திகள்

2ஜி முறைகேடு தொடர்பான விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க சுப்ரீம் கோர்ட் கெடு

Published On 2018-03-12 08:56 GMT   |   Update On 2018-03-12 08:56 GMT
ஏர்செல் மேக்சிஸ் உள்ளிட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் 6 மாதங்களுக்குள் முடிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது.#2G #SC
புதுடெல்லி:

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டால் மத்திய அரசின் சார்பில் வாதாட சிறப்பு அரசுதரப்பு வக்கீலாக ஆனந்த் குரோவர் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவ்வழக்கில், முன்னர் மத்திய அரசின் சார்பில் ஆஜராகி வாதாடிவந்த இவருக்கு பதிலாக கூடுதல் சோலிட்டர் ஜெனரல் துஷார் மேஹத் என்பவரை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசு சமீபத்தில் பரிந்துரைத்தது.

இதை இன்று ஏற்றுகொண்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு, ஏர் மேக்சிஸ் உள்பட 2ஜி முறைகேடு தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் தொடர்பாக தற்போதைய நிலவரப்படி தன்னிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது.



மேலும், இதுதொடர்பான விசாரணை நீண்டகாலமாக இழுத்துகொண்டே போகிறது. உணர்வுப்பூர்வமான இதுபோன்ற முக்கிய வழக்குகளின் விசாரணை தொடர்பாக நாட்டு மக்களை வெகுகாலத்துக்கு இருட்டில் வைக்க முடியாது.

எனவே, ஏர்செல் மேக்சிஸ் உள்ளிட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் சி.பி.ஐ., பொருளாதார அமலாக்கத்துறை போன்ற விசாரணை முகமைகள் இன்னும் 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது. #2G #SC #tamilnews

Tags:    

Similar News