செய்திகள்

கேரள மந்திரி கையை பிடித்து இழுத்தாக பேஸ்புக்கில் பெண் ஊழியர் பரபரப்பு புகார்

Published On 2018-02-21 05:31 GMT   |   Update On 2018-02-21 05:55 GMT
கேரளாவில் மந்திரி தனது கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்ததாக பேஸ்புக்கில் பெண் புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியும் தங்கள் ஆட்சியில் தவறுகள் நடக்காது என்று வாக்குறுதி அளித்தும் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியை பிடித்தது.

ஆனால் கம்யூனிஸ்டு ஆட்சி அமைந்தபிறகு பினராயி விஜயன் மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள பல மந்திரிகள் சர்ச்சையில் சிக்கினார்கள். உறவினர்களுக்கு அரசு பணியில் சலுகை காட்டியது மற்றும் பெண்கள் பாலியல் புகார் என்று தொடர் சர்ச்சைகள் உருவானது. இதில் சில மந்திரிகள் பதவியையும் இழந்தனர்.

இந்தநிலையில் தற்போது கேரள மந்திரி ஒருவர் மீது செக்ஸ் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த புகாரை கூறி உள்ளவர் கேரள அரசு தலைமை செயலகத்தில் ஊழியராக பணியாற்றிவர் ஆவார். அவர், மந்திரியின் பெயரை குறிப்பிடாமல் மந்திரி தனது கையைப்பிடித்து இழுத்து முத்தமிட்டதாக ‘பேஸ்புக்’கில் இந்த பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்.

தனது ‘பேஸ்புக்’கில் அந்த பெண் கூறியிருப்பதாவது:-

நான் கணவரை இழந்த ஒரு இளம்பெண். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். நான் கேரள அரசு தலைமை செயலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தேன். அப்போது நான் ஒரு மந்திரியின் அறைக்கு கோப்பு ஒன்றில் கையெழுத்து வாங்குவதற்காக சென்றேன்.

அப்போது அவர் எனது கையைப்பிடித்து இழுத்து உள்ளங்கையில் முத்தமிட்டார். இதை எதிர்பார்க்காத நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். பிறகு அங்கிருந்து வேகமாக வெளியில் சென்றுவிட்டேன். இதுபற்றி நான் யாரிடமும் கூறாததற்கு காரணம் நான் 2 மகள்களுக்கு தாய். மேலும் எனக்கு உதவுவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். மந்திரியை எதிர்க்கும் அளவுக்கு எனக்கு பலமும் கிடையாது.

இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

புகாரில் கூறப்பட்ட மந்திரி யார்? என்பதை கண்டறிவதற்காக பேஸ்புக் முகவரி மூலம் அந்த பெண்ணை தொடர்பு கொண்டபோது அவர் தான் கூறிய குற்றச்சாட்டு உண்மைதான். ஆனால் மந்திரியின் பெயரை வெளியிட விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார். மந்திரி மீதான இந்த பாலியல் புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News