செய்திகள்

ஐதராபாத்தில் வினோதம்- வட்டிக்கு கடன் கொடுக்கும் 100 பிச்சைக்காரர்கள்

Published On 2018-02-20 08:56 GMT   |   Update On 2018-02-20 08:56 GMT
ஐதராபாத் நகரில் வசிக்கும் பிச்சைக்காரர்களில் சுமார் 100 பேர் வட்டிக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்களாக வலம் வருவது தெரியவந்துள்ளது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி ஐதராபாத் நகரில் பிச்சை எடுப்பவர்களை சமூக அமைப்புகளின் உதவியுடன் பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைத்து மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

ஆனாலும் சில பிச்சைக்காரர்கள் தங்கள் தொழிலை கைவிட மறுத்து வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து கோவில், மசூதிகள் மற்றும் முக்கிய இடங்களில் பிச்சை எடுத்து வருகிறார்கள்.

இதுசம்பந்தமாக சமூக அமைப்புகள் விசாரித்தபோது, அவர்களில் பலர் பிச்சை எடுத்த பணத்தில் வட்டிக்கு பணம் கொடுப்பது தெரியவந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் வட்டிக்கு பணம் கொடுப்பதை கண்டறிந்துள்ளனர்.


பெரும்பாலும் அவர்கள் சிறு வியாபாரிகள், தெருவோர கடைக்காரர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுக்கிறார்கள். ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை இவ்வாறு கடனாக கொடுக்கப்படுகிறது. பணம் கொடுத்த அன்றே அதை வாங்குபவர்கள் திருப்பி செலுத்த வேண்டும். இதற்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை ஒருநாளைக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது.

இதில் நல்ல வருமானம் கிடைப்பதால் பிச்சை எடுக்கும் தொழிலை கைவிடாமல் தொடருவது தெரியவந்தது.

ஐதராபாத்தில் நம்பள்ளி, மெக்கா மசூதி, கொல்கொண்டா தர்கா, தரசத்பாபா, செரித் தர்கா, காச்சிகுடா ரெயில் நிலையம், பிர்லா மந்திர்,  அஷ்டலட்சுமி கோவில், கர்மன்காட் கோவில் போன்ற இடங்களில் பிச்சை எடுப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. அதில் கிடக்கும் பணத்தை அவர்கள் வட்டிக்கு கொடுத்து சம்பாதிக்கிறார்கள்.

பெரும்பாலும் அதிகாலையில் அல்லது நள்ளிரவு நேரத்தில் ரகசியமாக வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை அவர்கள் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #beggarsturnsfinanciers #Tamilnews
Tags:    

Similar News