செய்திகள்

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே 126 வேட்பாளர்களை அறிவித்த தேவேகவுடா கட்சி

Published On 2018-02-18 07:32 GMT   |   Update On 2018-02-18 08:12 GMT
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே 126 தொகுதிக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது. #KarnatakaPoll #JDS #DeveGowda
பெங்களூர்:

கர்நாடக மாநில சட்டசபையின் பதவி காலம் மே 30-ந்தேதி முடிகிறது. இதனால் அங்கு ஏப்ரல்- மே மாதங்களில் தேர்தல் நடக்கிறது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 126 தொகுதிக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை அறிவித்தது. அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் தேவேகவுடாவின் மகனான முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

அந்த கட்சி பெங்களூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் 126 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்தது. இந்த கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் பங்கேற்றார்.

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி, ரமணா காரா தொகுதியிலும், அவரது மூத்த சகோதரர் ரேவன்னா, ஹோலன்சி புரா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். இருவரும் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.

மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளம் 166 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எஞ்சிய 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அந்த கட்சி பின்னர் அறிவிக்கிறது. பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் 58 தொகுதிகளில் போட்டியிடுகிறது. #KarnatakaPoll #JDS #DeveGowda
Tags:    

Similar News