செய்திகள்

சந்திராயன் 2 திட்டம் ஏப்ரலில் செயல்படுத்தப்படும் - இஸ்ரோ தகவல்

Published On 2018-02-16 20:11 GMT   |   Update On 2018-02-17 02:37 GMT
நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்டு ஆய்வு செய்ய உள்ள சந்திராயன் 2 திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். #ISRO #Chandrayaan2 #launchedinApril
ஸ்ரீஹரிகோட்டா:

முதன் முதலில் நிலவுக்கு அனுப்பட்ட சந்திரயான் 1 விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. ஆனால் சந்திராயன் 2 திட்டத்தை பொறுத்தவரை விண்கலம், ஆய்வூர்தி மற்றும் ஆய்வூர்தியை இயக்குவதற்கான லேண்டர் ஆகிய மூன்றும் அனுப்பப்பட உள்ளன. இவற்றின் மொத்த எடை 3,290 கிலோ என்பதால் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 2 மூலம் ஏவப்பட்ட உள்ளதாக இந்த அத்திட்டத்திற்கான பொறுப்பு அதிகாரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். சந்திராயன் 2 திட்டம் வரும் ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏப்ரலில் ஏவப்பட்ட பின்னர் நிலவின் திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதைக்கு சந்திராயன் 2 விண்கலம் செல்ல 2 மாதங்கள் வரை ஆகும். நிலவின் திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் நுழைந்தவுடன் அதிலிருந்து லேண்டர் கருவி தென் துருவத்தில் இறங்கும். பின்னர் லெண்டரில் இருந்து 6 சக்கரங்கள் கொண்ட ஆய்வூர்தி பிரிந்து நிலவின் பரப்பில் 150 முதல் 200 மீட்டர் வரை செல்லும். 14 நாட்களுக்கு நிலவின் பரப்பு குறித்து வேதியியல் பகுப்பாய்வு உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும்.



இந்த ஆய்வுகள் குறித்த தகவல்களை 15 நிமிடங்களுக்குள் நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள விண்கலத்தின் மூலம் பூமிக்கு ஆய்வூர்தி அனுப்பும். 14 நாட்களுக்கு பின்னர் ஸ்லீப் மோட் எனும் செயலற்ற நிலைக்கு ஆய்வூர்தி சென்றுவிடும். அதன் பிறகு சூரிய ஒளி மூலம் ரோவரின் பேட்டரிகள் மின்னேற்றம் பெற்றால் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். சந்திராயன் 2 திட்டத்தின் விண்கலம், லேண்டர், ஆய்வூர்தி ஆகிய மூன்றும் தயாராகிவிட்டது. அவற்றை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்புக்கு பிறகு சந்திரயான் 2 தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும். சந்திராயன் 2 ஏவப்படும் தேதி பூமியிலிருந்து ஒப்பிடும் போது நிலவு எந்த நிலையில் இருக்கும் என்பன உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். இதற்காக சுமார் 800 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். #Chandrayaan2 #launchedinApril #tamilnews #ISRO
Tags:    

Similar News