செய்திகள்

பாக். ராணுவம் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்பு: காஷ்மீர் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Published On 2018-01-20 10:21 GMT   |   Update On 2018-01-20 10:21 GMT
பாகிஸ்தான் படைகள் தாக்குதலில் இருந்து எல்லையோர கிராம மக்களை பாதுகாக்க அரசு தவறியதாக கூறி ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ராணுவமும் பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சண்டையில் ராணுவ வீரர்கள் மற்றும்  எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் பலியாகின்றனர். இன்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தொடர்கிறது. 

கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் 3 பேர், 2 எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், ஒரு ராணுவ வீரர் என 6 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  பாகிஸ்தான் ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்துடனேயே எல்லையோர மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த விவகாரம் இன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் எதிரொலித்தது. சபாநாயகர் வந்து அமர்ந்து, சட்டசபை கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் எழுந்து நின்று மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். 

எல்லையில் பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு தவறியதாக குற்றம்சாட்டிய அவர்கள், சிறிது நேரத்தில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன்பின்னர் தொடர்ந்து கூட்டம் நடந்தது. அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராக பா.ஜ.க. உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அவர்களை ஆளுங்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி சமாதானம் செய்து, பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என உறுதி அளித்தது. #tamilnews
Tags:    

Similar News