செய்திகள்

மல்லையாவின் ரூ.4 ஆயிரம் கோடி பங்குகளை விற்க முடிவு: அமலாக்கத்துறை நடவடிக்கை

Published On 2018-01-19 06:56 GMT   |   Update On 2018-01-19 06:56 GMT
லண்டனில் இருந்து வழக்குகளை சந்தித்துவரும் மல்லையாவின் பங்குகளை விற்பனை செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. #Vijaymallya #ED #London
புதுடெல்லி:

பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கிய பிரபல தொழில் அதிபர் மல்லையா அவற்றை திருப்பி செலுத்த முடியாமல் லண்டனுக்கு தப்பி சென்று விட்டார்.

இதைத் தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து மல்லையாவின் சொத்துகளை விற்று பணத்தை திரட்டி வருகிறார்கள்.

மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் அவரது சொத்துக்கள் ஒவ்வொன்றாக அவரிடமிருந்து நழுவி வருகின்றன. இந்தியாவிலேயே பீர் உற்பத்தியில் நம்பர்ஒன் நிறுவனத்தை நடத்தி வந்த அவர் அந்த நிறுவனத்தில் பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை தனது பெயரில் வைத்திருந்தார்.

இது தொடர்பாக அமலாக்கத்துறை பல தடவை மல்லையாவுக்கு இ.மெயில் அனுப்பி பதில் கேட்டது. ஆனால் மல்லையா எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அந்த பீர் நிறுவனத்தின் பங்குகளை விற்று பணம் திரட்ட அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

பீர் நிறுவனத்தின் பங்குகளில் 15.2 சதவீத பங்குகளை முதல் கட்டமாக விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று அந்த பங்குகளின் விலை தலா ரூ.1,081.85 ஆக இருந்தது.

இந்த பங்குகள் அனைத்தையும் விற்றால் 4 ஆயிரத்து 327 கோடி ரூபாய் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதற்காக 15 சதவீத பங்குகள் அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டு விட்டன.

பண பரிவர்த்தனை மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. விரைவில் மல்லையாவின் பீர் நிறுவனத்தின் மீதம் உள்ள 27 சதவீதம் பங்குகளும் அமலாக்கத்துறை வசம் வர உள்ளது.

இந்த பங்குகளையும் விற்று விட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மேலும் சில ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட முடியும். இதற்கு முன்பு ராமலிங்கராஜுவின் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் பங்குகளையும் அமலாக்கத்துறை விற்பனை செய்து பணம் திரட்டியது. #Vijaymallya #ED #London #tamilnews
Tags:    

Similar News