செய்திகள்

திருப்பதிக்கு நிகராக சபரிமலையிலும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்: கேரள அரசு தீவிரம்

Published On 2018-01-16 10:50 GMT   |   Update On 2018-01-16 10:50 GMT
திருப்பதி திருமலையில் உள்ளதுபோன்று சபரிமலையிலும் பக்தர்களுக்காக சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்:

திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி கோயில் மற்றும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தங்கு தடையின்றி குடிநீர், உணவு மற்றும் தங்கும் விடுதிகள் என விரிவான அளவில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரி மலை அய்யப்பன் ஆலயம் மற்றும் ஆலயத்தினை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தி பக்தர்களுக்கு சிறப்பு வசதிகளை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக கேரள மாநில தேவசம் போர்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், “முதல்வர் பினராயி விஜயன் உத்தரவின்படி, திருமலை மாதிரி வளர்ச்சித் திட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வல்லுநர் குழு விரைவில் திருப்பதி செல்ல உள்ளது.



இந்த ஆய்வு பணிக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். அய்யப்பன் கோயில் மலைப்பகுதியில் இருப்பதால், அந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ப வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.” என்றார்.

ஜனவரி மாதம் 14ம் தேதி மகரவிளக்கு திருநாள் வரையில் கோயிலுக்கு 255 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளதாகவும், கடந்த ஆண்டை விட இது 45 கோடி ரூபாய் அதிகம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Tags:    

Similar News