செய்திகள்

காப் பஞ்சாயத்துகளை மத்திய அரசு தடை செய்யாவிட்டால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்: சுப்ரீம் கோர்ட்

Published On 2018-01-16 06:45 GMT   |   Update On 2018-01-16 06:45 GMT
காப் பஞ்சாயத்துகளை மத்திய அரசு தடை செய்யாவிட்டால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. #SC #KhapPanchayats
புதுடெல்லி:

வட இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் காப் பஞ்சாயத்து எனப்படும் ஊர் பஞ்சாயத்து செயல்படுகிறது. இங்கு சாதாரண அடிதடி பிரச்சனையில் தொடங்கி குடும்ப பிரச்சினை வரை விசாரித்து மக்கள் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. குறிப்பாக இரு வேறு சாதிகளைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  காப் கட்டப்பஞ்சாயத்து தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. 

காப் பஞ்சாயத்தாரை கடுமையாக கண்டித்துள்ள நீதிபதிகள், ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்வது அவர்களின் விருப்பம் என்றும், சாதிகளை மறந்து காதல் திருமணம் செய்வோரை யாரும் தடுக்கக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.



“18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்தால், அவர்களை ஊர் பஞ்சாயத்தில் தண்டிப்பது சட்டத்திற்கு எதிரானது. காப் பஞ்சாயத்துக்கு தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் எடுக்கும்” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #SC #KhapPanchayats #tamilnews

Tags:    

Similar News