செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தல்: ராகுல் காந்தி பிப்ரவரி 10-ம் தேதி சுற்றுப்பயணம்

Published On 2018-01-14 01:30 GMT   |   Update On 2018-01-14 01:30 GMT
கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிப்ரவரி 10-ம் தேதி முதல் 3 நாள்களுக்கு அங்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். #RahulGandhi #KarnatakaPoll
பெங்களூர்:

கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிப்ரவரி 10-ம் தேதி முதல் 3 நாள்களுக்கு அங்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.

கர்நாடகா சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் வருகிற மே மாதம் 28-ம் தேதி முடிகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமி‌ஷன் ஆலோசனை நடத்தி வருகிறது. ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 123 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இந்த தடவையும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஆனால் காங்கிரசிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் வியூகம் வகுத்து வருகிறார்கள்.

தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருப்பதால் காங்கிரசும், பா.ஜனதாவும் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டன.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்குள்ள தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக பிப்ரவரி 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை அங்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் என மாநில காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.

இந்த பயணத்தின்போது வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், வெற்றி வாய்ப்பு குறைவான தொகுதிகள் உள்பட பல்வேறு முக்கிய வி‌ஷயங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டறிகிறார். மேலும், பிரசாரத்தை எந்தெந்த வகைகளில் முன்னெடுத்து செல்வது என்பது பற்றியும் அவர் விசாரிக்க உள்ளார் என தெரிவித்தனர்.  #RahulGandhi #KarnatakaPoll #tamilnews
Tags:    

Similar News