செய்திகள்

மரணமடைந்த மகனின் உடலுடன் மலேசிய ஏர்போர்ட்டில் தவித்த தாய்க்கு உதவிய சுஷ்மா

Published On 2018-01-12 10:20 GMT   |   Update On 2018-01-12 10:20 GMT
மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்தில் மரணமடைந்த மகனின் உடலுடன் தவித்த தாய்க்கு உதவும் வகையில் அவரது உடலை இந்தியா கொண்டுவர சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். #SushmaSwaraj #KualaLumpur

புதுடெல்லி:

இந்தியாவை சேர்ந்த ஒரு வாலிபர் தனது தாயுடன் ஆஸ்திரேலியா சென்றுவிட்டு இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். அப்போது மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து அந்த வாலிபருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அங்கு விமான நிலையத்தில் மரணமடைந்தார். 

இதையடுத்து அவரது தாய் செய்வதறியாது கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித் தவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த வாலிபரின் நண்பர் ஒருவர் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், ‘சுஷ்மா சுவராஜ்க்கு அவசர மற்றும் தயவு கோரிக்கை, எனது நெருங்கிய நண்பரும், அவரது தாயும் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வந்துகொண்டிருந்தனர். கோலாலம்பூர் சர்வதேச விமானநிலையத்தில், எனது நண்பர் மரணமடைந்தார். அன் நண்பரின் தாய் தனியாக விமான நிலையத்தில் சிக்கியுள்ளார், அவருக்கு எப்படி உதவுவது என எனக்கு தெரியவில்லை’, என கூறியிருந்தார். 



இந்நிலையில், அந்த நபரின் டுவிட்டை பார்த்த சுஷ்மா உடனடி நடவடிக்கையில் இறங்கினார். உடனடியாக கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசியுள்ளார். மேலும் மரணமடைந்த நபரின் உடலை அரசின் செலவில் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளார். 



இந்த தகவலை டுவிட்டர் மூலம் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள டுவிட்டில், ‘மரணமடைந்தவரின் உடலை இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக இந்தியாவுக்கு கொண்டுவருவார்கள். மரணமடைந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’, என கூறியுள்ளார். #SushmaSwaraj #KualaLumpur #Malaysia #tamilnews
Tags:    

Similar News