செய்திகள்

டெல்லி ஆசிரமத்தில் அடைத்து வைத்திருந்த 41 சிறுமிகள் மீட்பு

Published On 2017-12-22 08:22 GMT   |   Update On 2017-12-22 08:22 GMT
டெல்லியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 41 சிறுமிகள் போலீசாரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி:

டெல்லியில் பாபா விரேந்தர் திக்சித்துக்கு சொந்தமான 'அத்யாத்மிக் விஷ்வா வித்யாலயா' இயங்கி வருகிறது. இங்கு சிறுமிகள் மற்றும் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டெல்லி பெண்கள் ஆணையம் மற்றும் குழந்தைகள் நலக் குழுவானது போலீசாருடன் இணைந்து நேற்று சோதனையில் ஈடுபட்டனர். 



இச்சோதனையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த ஆசிரமத்தில் பல சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 41 சிறுமிகளை போலீசார் மீட்டனர். அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் கூறினர். மேலும் பல சிறுமிகள் அங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் பேசுகையில், 'டெல்லி ரோகினி பகுதியில் உள்ள ஆசிரமத்தில் சிறுமிகள் கைதிகள் போல் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருந்த நிலைமையை குறித்து பேச முடியவில்லை. சிறையில் இருப்பது போல சிறுமிகள் ஆசிரமத்தின் அறைகளில் இருந்தனர். ஆசிரமத்தின் உரிமையாளரான பாபா விரேந்தர் திக்சித் கைது செய்யப்பட வேண்டும். மேலும் ஆசிரமத்தில் உள்ள மற்ற சிறுமிகளை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உயர்நீதிமன்றம் உதவ வேண்டும்' என கூறினார்.


                                 
ஸ்வாதி மாலிவால்

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் பாபா விரேந்தர் திக்சித் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்படும். மேலும் அவர்களது 8 ஆசிரமங்களின் பட்டியலையும் சமர்பிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News