செய்திகள்

கறுப்பு பண விவரங்கள் பகிர்வது தொடர்பாக இந்தியா-சுவிஸ் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்து

Published On 2017-12-22 00:32 GMT   |   Update On 2017-12-22 00:32 GMT
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இருநாட்டிடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதுடெல்லி:

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இருநாட்டிடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி வரும் ஜனவரி முதல் தகவல்கள் பறிமாறப்பட உள்ளன.

சுவிட்சர்லாந்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்கவும், அது பற்றிய தகல்களை சேகரிக்கவும் அந்த நாட்டுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில், கருப்பு பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதில் சுவிட்சர்லாந்து தரப்பில் இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து தூதர் ஆண்ட்ரிஸ் பாவும், இந்தியா தரப்பில் மத்திய நேரடி வரிவிதிப்பு வாரிய தலைவர் சுஷில் சந்திராவும் கையெழுத்திட்டனர்.

இந்த தகவல் பறிமாற்ற ஒப்பந்தம் வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியர்கள் சுவிட்சர்லாந்து வங்கியில் கணக்கு வைத்திருந்தால், அந்த வங்கியின் அதிகாரிகள் கணக்கு வைத்திருப்பவர் குறித்த விபரங்களை உடனடியாக இந்திய அதிகாரிகளுக்கு அனுப்பி விடுவர். இரு நாடுகளுக்கு இடையே போடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தின் கீழ், சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவரின் பெயர், வங்கி கணக்கு எண், முகவரி, பிறந்த தேதி, வரி அடையாள எண், வட்டி விபரம், காப்பீட்டு திட்டங்கள் தொடர்பான விபரங்கள், கணக்கில் இருக்கும் இருப்பு தொகை, நிதி சொத்துக்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட விபரங்கள் ஆகிய விபரங்கள் பரிமாறிக் கொள்ளப்பட உள்ளன.
Tags:    

Similar News