செய்திகள்

வீண் செலவுகளை தவிர்க்க இடைத்தேர்தல்கள் ரத்து ஆகுமா?: தேர்தல் கமி‌ஷன் ஆலோசனை

Published On 2017-12-20 08:03 GMT   |   Update On 2017-12-20 08:03 GMT
இடைத்தேர்தல்கள் நடத்துவதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதுடன் முறைகேடுகளுக்கு வழி வகுக்கிறது. எனவே இடைத்தேர்தலே நடத்தாமல் மாற்று ஏற்பாடு செய்யலாமா என தேர்தல் கமி‌ஷன் ஆலோசித்து வருகிறது.

புதுடெல்லி:

தற்போது சட்டசபை தொகுதியிலோ, பாராளுமன்ற தொகுதியிலோ அதன் பிரதிநிதியாக இருப்பவர் மரணம் அடைந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ அந்த தொகுதிக்கு 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தி புதிய பிரதிநிதி தேர்வு செய்யப்படுகிறார்.

இடைத்தேர்தல்கள் நடத்துவதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதுடன் முறைகேடுகளுக்கு வழி வகுக்கிறது. ஆளுங்கட்சி இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் வெற்றி பெறுவதற்காக அதிகார துஷ்பிரயோகம், பண பலம் போன்றவற்றை பயன்படுத்தும் நிலை அதிகரிக்கிறது.

இதனால் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுகிறது. இதில் ஆளுங்கட்சி முறையாக செயல்பட்டாலும் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு ஆளாகிறது. தேர்தல் கமி‌ஷனுக்கும் பல்வேறு தர்ம சங்கடங்கள் ஏற்படுகிறது.

மேலும் தேர்தல் கமி‌ஷனுக்கு கூடுதல் செலவும் ஏற்படுகிறது. ஏற்கனவே அந்த தொகுதியில் தேர்தல் நடந்த போது செலவு செய்த நிலையில் அதே தொகுதியில் பதவி காலம் முடிவடையும் முன் மீண்டும் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இடைத்தேர்தல் பிரசாரத்தால் அந்த தொகுதி மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. அடிக்கடி தேர்தல் நடைபெறுவதால் மக்களிடையே வெறுப்பு ஏற்படுகிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே இது போன்ற அசவுகரியங்களை தவிர்க்க இனி இடைத்தேர்தலே நடத்தாமல் மாற்று ஏற்பாடு செய்யலாமா என தேர்தல் கமி‌ஷன் ஆலோசித்து வருகிறது.

எனவே எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. இறந்தால் அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவரோ அந்த கட்சியைச் சேர்ந்தவருக்கே தேர்தல் நடத்தாமல் அந்த தொகுதியை வழங்கலாமா என ஆலோசிக்கப்படுகிறது. ஏனெனில் அந்த கட்சியைச் சேர்ந்தவர் 5 ஆண்டுகள் பதவியில் இருக்கவே மக்கள் அவரை தேர்வு செய்கின்றனர். எனவே அந்த கட்சிக்கு வழங்கலாம் என்பதை சரியாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயம் அந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் சுயேச்சையாக இருந்தால் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. இதில் மட்டும் இன்னும் முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக உள்ளது.

மறைந்த வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக இருந்தவருக்கு அந்த வாய்ப்பை வழங்கலாமா என ஆலோசித்த போது, அந்தப் பதவிக்காக குற்றங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்ற அச்சமும் உள்ளது.

இதன் காரணமாக முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது என்றாலும் மாற்று வழிகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே தேர்தல் செலவை குறைப்பதற்காக சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாமா என்றும் தேர்தல் கமி‌ஷன் ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்து விட்ட நிலையில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

Tags:    

Similar News