செய்திகள்

ஏர் டெக்கான் நிறுவனத்தின் அறிமுக சலுகை: மும்பை-நாசிக் விமான டிக்கெட் விலை 1 ரூபாய்

Published On 2017-12-13 12:56 GMT   |   Update On 2017-12-13 12:56 GMT
நீண்ட காலத்திற்கு பின் சேவையை தொடர இருக்கும் ஏர் டெக்கான் நிறுவனம், அறிமுக சலுகையாக ஒரு ரூபாயில் விமானத்தில் செல்லும் திட்டத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

பெங்களூர்: 

இந்திய விமான சேவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ஏர் டெக்கான். 2003 ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி இந்த நிறுவனத்தின் சேவை தொடங்கப்பட்டது. பெங்களூரை சேர்ந்த ஜி.ஆர்.கோபிநாத் என்ற முன்னாள் ராணுவ கேப்டன் இந்த நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் 1 ரூபாய் டிக்கெட் என நிறைய அதிரடி நடவடிக்கைகள் மூலம் வேகமாக வளர்ந்து வந்தது.

இருப்பினும், ஏர் டெக்கான் விமான நிறுவனம் பல்வேறு காரணங்களால் திடீரென நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக 2008ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் பங்குகளை கிங்ஃபிஷர் நிறுவனம் வாங்கியது. இதைத் தொடர்ந்து, ஏர் டெக்கான் நிறுவனத்தின் லோகோ மாற்றப்பட்டது. தொடர்ந்து 2012ஆம் ஆண்டு ஏர் டெக்கான் விமான சேவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த ஏர் டெக்கான் நிறுவனம் மீண்டும் தனியாக செயல்பட இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த விலையில் பயண கட்டணம் நிர்ணயிக்கும் ஏர் டெக்கான் விமான நிறுவனம் மீண்டும் ஒரு ரூபாயில் டிக்கெட் விற்க போவதாக அறிவித்திருக்கிறது. அதன்படி முதலில் பயணம் செய்யும் ஒருசில அதிர்ஷ்டசாலி பயணிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இன்னும் சில முக்கியமான எதிர்கால திட்டங்கள் இருப்பதாகவும் கூறப்படுள்ளது.



இந்த நிறுவனத்தை தொடங்கிய கோபிநாத் தான் மீண்டும் நிறுவனத்தை நடத்த இருக்கிறார். வரும் 22-ம் தேதியில் இருந்த விமான சேவை தொடங்கும் என கூறப்படுகிறது. ஜனவரியில் இருந்து இந்த சேவை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். முதல் விமானம் நாசிக்கில் இருந்து மும்பை வரை செல்லும். அதற்காக பயண கட்டணம் ரூ.1 என்ற அளவில் நிர்ணயிக்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 

''எளியவர்களும் மேகத்தில் பறக்கலாம்'' என்ற வாசகத்தோடு ஏர் டெக்கான் விமானம் பறக்க இருக்கிறது. புகழ்பெற்ற ஓவியர் ஆர்.கே லக்‌ஷ்மன் வரைந்த ஓவியம் இதில் லோகோவாக பயன்படுத்தப்பட இருக்கிறது. எளியவர்களும் விமானத்தில் பறக்கக்கூடிய வகையில் மத்திய அரசு உருவாக்கிய திட்டங்கள் தான் மீண்டும் சேவையை தொடங்கியதற்கு காரணம் என இதன் நிறுவனர் கோபிநாத் தெரிவித்திருக்கிறார்.
Tags:    

Similar News