செய்திகள்

‘பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும்’ - இந்தியா, ரஷியா, சீனா கூட்டறிக்கை

Published On 2017-12-11 19:33 GMT   |   Update On 2017-12-11 19:33 GMT
பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என்று, இந்தியா, ரஷியா மற்றும் சீனா இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளன.
புதுடெல்லி:

பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என்று, இந்தியா, ரஷியா மற்றும் சீனா இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளன.

ரஷியா-இந்தியா-சீனா (ரிக்) ஆகிய 3 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும் 15-வது முத்தரப்பு சந்திப்பு நேற்று டெல்லியில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக சீன வெளியுறவு மந்திரி வாங் யி மற்றும் ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் டெல்லி வந்தனர்.



வெளியுறவு மந்திரிகளின் முக்கியமான இந்த சந்திப்பின் போது, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளாக விளங்கும் அனைத்து விதமான பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத அச்சுறுத்தலை தடுப்பதுடன், எதிர்த்து போராடுவது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் 3 நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், ‘பயங்கரவாதத்தில் ஈடுபடுவோர், அவற்றை ஆதரிப்பவர்கள், தூண்டுவோர், ஒருங்கிணைப்பவர்கள் ஆகியோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். தங்கள் பிராந்தியத்தில் இருந்து இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தடுக்க அனைத்து நாடுகளும் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.



இந்த நிகழ்வுக்கு இடையே சீன வெளியுறவு மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் தனியே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பின்னர் மாலையில் நடந்த இந்தியா-சீனா கலாசார நிகழ்வு ஒன்றிலும் வாங் யி பங்கேற்றார்.

இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டர் தளத்தில், ‘நமது இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை வழங்கும் வகையில், ‘ரிக்’ வெளியுறவு மந்திரிகள் கூட்டத்துக்கு முன்னதாக சீன வெளியுறவு மந்திரி வாங் யியுடன் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் ஒரு சந்திப்பை நடத்தினார்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக தனது டெல்லி பயணத்துக்கு முன் பீஜிங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வாங் யி, ‘இந்தியாவுடன் சிறந்த நட்புறவை சீனா எப்போதும் பேணி வருகிறது. ஏனெனில் மிகவும் பெரிய இரு அண்டை நாடுகளும் ஒன்று மற்றொன்றின் பழமையான நாகரிகத்தை கொண்டிருக்கிறது’ என்றார்.

டோக்லாம் பகுதியில் இந்திய படையினர் அத்துமீறிய போது சீனா கட்டுப்பாடுடன் நடந்து கொண்டதாக கூறிய வாங் யி, அந்த பிரச்சினையை தூதரக உறவின் அடிப்படையில் கையாண்டு இந்திய படைகளையும், பொருட்களையும் வாபஸ் பெறச்செய்ததாகவும் தெரிவித்தார். சீனா தனது ஒருங்கிணைந்த பிராந்திய நலன்கள் மற்றும் தனது இறையாண்மையில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

டோக்லாம் உரிமை தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், அந்த சிக்கலுக்குப்பின் இரு நாட்டு உயர்மட்ட தலைவர்கள் சந்திக்கும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்போல ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவையும், சுஷ்மா சுவராஜ் தனியாக சந்தித்து பேசினார். 
Tags:    

Similar News