செய்திகள்

குஜராத்: தடையை மீறி ஹர்திக் பட்டேல் பேரணி

Published On 2017-12-11 12:25 GMT   |   Update On 2017-12-11 12:26 GMT
பட்டிடார் அனாமத் அண்டோலன் சமிதி ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் பட்டேல் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இன்று தடையை மீறி பேரணி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி கைதாகி, ஜாமினில் விடுதலை ஆனவர் பட்டிடார் அனாமத் அண்டோலன் சமிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ஹர்திக் பட்டேல்.

குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக இவர் அறிவித்துள்ளார். அங்கு இரண்டாம்கட்ட தேர்தல் வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தலைநகர் அகமதாபாத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாளை பேரணி நடத்த காங்கிரஸ் கட்சியினர் அனுமதி கேட்டிருந்தனர்.

ஆனால், போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். நாளை நடத்துவதாக இருந்த பா.ஜ.க.வின் பேரணி மற்றும் பட்டிடார் அனாமத் அண்டோலன் சமிதி பேரணிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பட்டிடார் அனாமத் அண்டோலன் சமிதி ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் பட்டேல் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் இன்று அகமதாபாத் நகரில் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்துக்கு தடையை மீறி மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தடையையும் மீறி பேரணி நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அகமதாபாத் நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.சிங் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News