செய்திகள்

டெல்லி: கட்டண உயர்வு எதிரொலி - 3 லட்சம் பயணிகளை இழந்த மெட்ரோ ரெயில் நிர்வாகம்

Published On 2017-11-25 01:19 GMT   |   Update On 2017-11-25 01:19 GMT
டெல்லியில் மெட்ரோ ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டதால் கடந்த அக்டோபர் மாதத்தில் சுமார் 3 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணிப்பதை தவிர்த்துள்ளனர்.
புதுடெல்லி:

டெல்லியில் தினசரி வேலைகளுக்கு செல்லும் மக்கள் விரைவாக செல்ல பெரும்பாலும் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், மெட்ரோ ரெயில் சேவையின் தரத்தை உயர்த்துவதாக கூறி மத்திய அரசு அதன் கட்டணங்களை சமீபத்தில் உயர்த்தியது. இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அவரது எதிர்ப்பை மீறி கட்டண உயர்வை மத்திய அரசு அமல்படுத்தியது.

ஏற்கனவே கடந்த மேமாதம் 100 சதவிதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் செப்டம்பர் மாதமும் ஒவ்வொரு நிலைக்கும் ரூ.10 என்ற வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கட்டண உயர்வால் மெட்ரோ ரெயில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கியது. கடந்த செப்டம்பர் மாதம் மெட்ரோ ரெயிலில் 27.4 லட்சம் பேர் பயணம் செய்த நிலையில், அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 11 சதவிதம் குறைந்து 24.2 லட்சம் ஆனது. மத்திய அரசின் கட்டண உயர்வு மூலம் சுமார் 3 லட்சம் பேர் மெட்ரோ ரெயில் பயணம் செய்வதை விட்டுவிட்டனர்.

மே மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டதனால் சுமார் 1.5 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதை விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News