செய்திகள்

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தமிழில் இணையதள சேவை தொடக்கம்

Published On 2017-11-23 10:23 GMT   |   Update On 2017-11-23 10:24 GMT
திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல்களை தெரிந்து கொள்ள வசதியாக, தமிழில் இணையதள சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
திருப்பதி:

திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பல்வேறு சேவைகளை தேவஸ்தானம் வழங்கி வந்தது. ஆங்கிலம் தெரியாத பல பக்தர்கள் தேவஸ்தானத்தின் பல்வேறு சேவைகளை பெற, அந்தந்த மாநிலங்களில் மக்கள் பேசும் மொழியில் இணையதள சேவையை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ந்தேதி நடந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், தெலுங்கு மொழியில் இணையதள சேவை தொடங்கப்பட்டது. முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு தொடங்கி வைத்தார். அதேபோல், கடந்த 1-ந்தேதி கன்னட மொழியில் இணையதள சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று தமிழ் மொழியில் திருப்பதி தேவஸ்தான இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதனை, திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில், முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தொடங்கி வைத்து பேசினார்.


திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தமிழ் மொழியில் இணையதள சேவையை முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் தமிழ் பக்தர்களின் வசதிக்காக தமிழ் மொழியில் இணையதள சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன டிக்கெட்டுகள், தேவஸ்தான தங்கும் விடுதிகளில் அறைகள் ஆகியவற்றுக்கு முன்பதிவு செய்யலாம். மேலும் தேவஸ்தானத்தின் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

பல்வேறு தகவல்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். அதற்காக, புதிய செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது.

இணையதளத்தில் சில தகவல்களை படிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கைகளை இணையதள மூலமும் (இ.உண்டியல் சேவை) செலுத்தலாம். அன்னப்பிரசாதம், சுகாதார வசதி உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம். ‘கோவிந்தா’ என்ற புதிய செயலி டிசம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News