செய்திகள்

முன்னாள் முதல் மந்திரி என்.டி.திவாரி ஐசியுவில் அனுமதி

Published On 2017-11-18 22:06 GMT   |   Update On 2017-11-18 22:06 GMT
முன்னாள் முதல் மந்திரியான என்.டி.திவாரி, மீண்டும் ஐசியுவில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

முன்னாள் முதல் மந்திரியான என்.டி.திவாரி, மீண்டும் ஐசியுவில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  

இந்தியாவில் இரு மாநிலங்களில் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் என்.டி.திவாரி. ஒருங்கிணைந்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக 3 முறையும், உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக ஒரு முறையும் என்.டி. திவாரி பதவி வகித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.

92 வயதாகும் என்.டி. திவாரி, தனது அரசியல் வாழ்க்கையில் பெரும் பகுதி காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தார். ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் ஆளுநராக 2007 முதல் 2009-ம் ஆண்டு வரையிலும் என்.டி. திவாரி இருந்தார். அப்போது அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் என்.டி திவாரி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார்.

இதற்கிடையே, கடந்த செப்டம்பரில் என்.டி. திவாரிக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி சாகெட் பகுதியில் உள்ள மாக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்.டி.திவாரி நேற்று மாலை சுய நினைவை இழந்தார். இதுகுறித்து அவரது மகன் ரோகித் சேகர் டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக டாக்டர்கள் திவாரியை ஐ.சி.யு.வில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Tags:    

Similar News