செய்திகள்

செம்மர கடத்தல் காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த தயங்க மாட்டோம்: ஆந்திர மாநில போலீஸ் ஐ.ஜி.

Published On 2017-11-15 03:36 GMT   |   Update On 2017-11-15 03:36 GMT
செம்மரங்களை கடத்துபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த தயங்க மாட்டோம் என ஆந்திர மாநில போலீஸ் ஐ.ஜி.காந்தாராவ் கூறினார்.
திருப்பதி:

திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிரடிப்படை போலீஸ் ஐ.ஜி.காந்தாராவ் திருப்பதியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிரடிப்படை போலீசார் நேற்று காலை சோமலா வனப்பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ராகிமாகுலகுண்டா வனப்பகுதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அந்தக் கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர்.

தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து 6 நாட்டுத்துப்பாக்கிகள், துப்பாக்கிகளை தயார் செய்வதற்கான இரும்புக்கம்பிகள் மற்றும் 20 செம்மரக்கட்டைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான ஹரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வன அதிகாரியை துப்பாக்கியால் சுட முயற்சி செய்து தப்பிச் சென்றவர். செம்மரங்களை வெட்ட தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும், குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகள் பலர் சேஷாசலம் வனப்பகுதிக்கு வந்தபடி உள்ளனர். ஏற்கனவே கர்நாடகம், தமிழகத்தில் செம்மரங்கள் அனைத்தையும் வெட்டி சாய்த்த நிலையில், தற்போது ஆந்திராவில் உள்ள செம்மரங்களை வெட்ட வருகின்றனர்.



ராயலசீமாவின் சொத்தாக உள்ள செம்மரங்களை காப்பாற்றவும், போலீசாரின் தற்காப்புக்காகவும், மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்த தயங்க மாட்டோம். தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் செல்வதே தவறு. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் செம்மரங்களை வெட்டினாலோ அல்லது காட்டுக்குள் சென்றாலோ அவர்களை கடத்தல்காரர்களாகவே பார்க்கப்படுவர்.

ஜவ்வாதுமலை உள்ளிட்ட மலை கிராமங்களிலும் நாட்டுத் துப்பாக்கிகள் தயார் செய்யும் கும்பல் உள்ளனர். அவர்கள், கடத்தல் கும்பலுக்கு நாட்டுத்துப்பாக்கிகளை தயார் செய்து கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே ஆந்திர போலீசார் உஷாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News