செய்திகள்

குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியை தவிர்க்கவே ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: சிவசேனா

Published On 2017-11-14 06:17 GMT   |   Update On 2017-11-14 06:17 GMT
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வியை தவிர்க்கவே ஜி.எஸ்.டி. வரி குறைப்பட்டடுள்ளது என்று சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.

மும்பை:

மத்திய அரசு மற்றும் மராட்டிய மாநில பா.ஜனதா அரசில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சி, பிரதமர் மோடி, பாரதிய ஜனதாவை விமர்சனம் செய்து வருகிறது.

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.யால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தது. அதோடு ராகுல் காந்தியையும் புகழ்ந்தது.

இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதையும் சிவசேனா விமர்சனம் செய்துள்ளது. குஜராத் தேர்தல் தோல்வியை தவிர்க்கவே இந்த முடிவு மேற் கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-

எந்த வி‌ஷயமாக இருந்தாலும் அதில் அரசியல் ஆதாயத்தையும், சுய விளம்பரத்தையும் பெறுவதில் பா.ஜனதா நிபுணத்துவம் பெற்ற கட்சியாக உள்ளது.


அந்த அடிப்படையில் பார்க்கும்போது தற்போது ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை மாற்றி அமைத்ததும் குஜராத் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டுதான் என தெரிகிறது.

தேர்தலில் படுதோல்வி அடைவதை தவிர்ப்பதற்காகவே மத்திய பா.ஜனதா முடிவை எடுத்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பதில் சமரசத்துக்கு இடமில்லை என்று தெரிவித்தவர்கள். தற்போது வளைந்து கொடுப்பது எதற்காக? குஜராத் தேர்தலில் பா.ஜனதா கடும் எதிர்ப்பை சந்திப்பதே அதற்கு காரணம் என்று அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளது.


கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 178 பொருட்கள் மீதான வரியானது 28 சத வீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News